குடிமைப்பணி தேர்வில் தமிழகத்தில் 10-வது இடம்-வேளாண் அதிகாரிக்கு, கலெக்டர் சரயு வாழ்த்து

Update: 2023-05-25 18:45 GMT

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கருங்காலிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரவி, கோமதி தம்பதியினர். இவர்களது முதல் மகள் ஹரிணி (வயது 26). இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் ஹரிணி தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வேளாண் அதிகாரியாக பணியாற்றினார். மேலும் குடிமைப்பணி தேர்வு எழுதி வந்தார். இந்தநிலையில் குடிமைப்பணி முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் இந்திய அளவில் 289-வது இடத்தையும், தமிழக அளவில் 10-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து 3 முறை குடிமைப்பணி முதல்நிலை தேர்வில் தோல்வி அடைந்த போதும், விடா முயற்சியுடன் படித்து தற்போது வெற்றி பெற்றுள்ளேன். ஊரக வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, பெண்கள் மேம்பாடு ஆகிய துறைகளில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்றார்.

இந்தநிலையில் வேளாண் அதிகாரி ஹரிணியை, மாவட்ட கலெக்டர் சரயு நேரில் சந்தித்து பூங்கொத்து, புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பொதுமக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்