தட்டார்மடத்தில் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்ட விவகாரம்:சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தட்டார்மடத்தில் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்ட விவகாரம் தொடர்பாக சாத்தான்குளத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2023-07-05 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் பஜாரில் கடந்த 2-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் நடப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில், சாதி கட்சி கொடிகம்பம்நடப்பட்டு உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தட்டார்மடத்தில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர். இதை தொடர்ந்து சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரதிகலா தலைமையில் ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ், மண்ட துணை தாசில்தார் முகம்மது தாஹீர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து, வருவாய் ஆய்வாளர் வெயிலுகந்தமாள், நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவர் சபிதா செல்வராஜ், மாநில இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் சக்திவேல், இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர் கலியமுத்து, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலர் சகாயவிஜயன், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட செயலர் ரவிசந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

இதன்படி, தட்டார்மடத்தில் அனைத்து அரசியல் கட்சி கொடி கம்பங்களும் நடப்பட்டு உள்ளன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அரசியல் கட்சி என்பதால், அந்த கட்சி கொடிகம்பமும் இருக்கலாம். அந்த கொடி கம்பத்தை அகற்ற தேவையில்லை. இனிமேல் அந்த கொடி கம்பம் தொடர்பாக யாரேனும் பிரச்சினை ஏற்படுத்தினால், அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்