ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கத்தில் பங்கேற்று நீர் மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டால் விருதுகள் பெறலாம் - கலெக்டர் தகவல்

ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கத்தில் பங்கேற்று நீர் மேலாண்மை பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு விருதுகள் பெறலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-19 07:36 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு நீர் மேலாண்மை பணிகளான தடுப்பணை கட்டுதல், கசிவுநீர் குட்டை தூர்வாருதல், வரவு கால்வாய் மற்றும் போக்கு கால்வாய் தூர்வாருதல், புறம்போக்கு நிலங்களில் நீர் உறிஞ்சி கழிவுகள் வெட்டுதல், மரக்கன்றுகள் நடுதல், அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்தல் போன்ற நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்ட நிர்வாகம் ஊர் கூடி ஊரணி காப்போம் என்ற இயக்கத்தின் மூலம் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 2022-2023-ம் ஆண்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாருதல், பராமரித்தல், புதிய நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுதல் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக ஊராட்சியில் ஊராட்சி அளவில், ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இதில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவருக்கு மழைநீர் காவலர் என்ற விருது வட்டார அளவில் 3 விருதுகள், மாவட்ட அளவில் 3 விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஊராட்சிகளில் நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தரமதிப்பீடு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். பணிகளின் தரம், பயன்பாடு, புது முயற்சிகள், சுற்றுச்சூழல் மேம்பாடு, மரம் வளர்த்தல் மற்றும் நாற்றங்கால் அமைத்தல் போன்ற பணிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கத்தில் பங்கேற்று தங்கள் ஊராட்சிகளில் உள்ள நீர் மேலாண்மை பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு விருதுகள் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்