13-ந்தேதி நடைபெற உள்ள லோக் அதாலத்தில் பங்கேற்று பயன்பெறுங்கள் - திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி வேண்டுகோள்

13-ந்தேதி நடைபெற உள்ள லோக் அதாலத்தில் பங்கேற்று பயன்பெறுங்கள் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-08-10 12:43 GMT

திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைகுழுவின் தலைவருமான செல்வசுந்தரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவொற்றியூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, மாதவரம், கும்மிடிப்பூண்டி போன்ற அனைத்து கோர்ட்டுகளிலும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அளித்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் லோக் அதாலத் நடைபெற உள்ளது. கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானமாக செல்லக்கூடிய வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்படும்.

லோக் அதாலத்துக்கு முன்னோட்டமாக கடந்த 29-ந் தேதி அன்று தொடங்கி கோர்ட்டு வேலை நாட்களில் அனைத்து கோர்ட்டு வளாகங்களில் பிற்பகல் 3 மணியில் இருந்து முன் சமரச பேச்சுவார்த்தை அமர்வுகள் நடைபெற்று வருகிறது. எனவே லோக் அதாலத்தில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்களுக்கு எந்த கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோ, அந்த மாவட்ட கோர்ட்டு அல்லது தாலுகா கோர்ட்டை உடனடியாக அல்லது வருகிற 13-ந்தேதிக்கு முன்னதாக அணுகி தங்களுடைய நிலுவையில் உள்ள வழக்கை லோக் அதாலத்துக்கு சமரசம் பேசி முடிக்க அனுப்பி வைக்கும்மாறு தங்களது வக்கீல் மூலமாக எழுத்து மூலமான கடிதத்தை சமர்ப்பித்து கோரலாம்.

வங்கி மற்றும் கட்டண நிலுவை சார்ந்த நிலுவையில் அல்லாத வழக்குகளை பொறுத்தமட்டில், வருகிற 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் 13 பிரத்யேக அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், சம்மன்கள் பெறப்பட்டிருப்பின் தங்கள் லோக் அதாலத்தில் தவறாமல் கலந்து கொண்டு வங்கி மற்றும் கட்டண நிலுவை, நிலுவையில் அல்லாத வழக்குகளில் ஒரு தொகையை செலுத்தி மற்றும் பாக்கி தொகை தவணை முறையில் செலுத்த சமரசம் செய்து கொள்ளலாம்.

அப்படி செய்வதன் மூலம் கோர்ட்டில் வங்கியின் சார்பாக வழக்கு தொடர்வதில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்