வாகனம் நிறுத்துவதற்கு 'பார்க்கிங் வசதி' செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

வாகனம் நிறுத்துவதற்கு ‘பார்க்கிங் வசதி’ செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Update: 2022-11-09 10:36 GMT

திருப்பூர்

இதுகுறித்து பொதுமக்கள், கடைக்காரர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-

ஏழுமலை (விற்பனை ஊழியர்-கருவம்பாளையம்):-

திருப்பூர் கோர்ட்டு வீதி முக்கிய சாலை என்பதால் அதிகமான வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன. ஆனால் இந்த சாலையின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுமக்கள் கடைகளுக்கு செல்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை 8 மணி முதல் 11 மணி வரை இந்த சாலை அதிக போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. இதன்காரணமாக வாகனங்களை இயக்குவதற்கு இடம் இல்லாமல் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். மேலும் நடந்து செல்வதற்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.

என்னுடைய வேலையும் இதனால் பாதிக்கப்படுகிறது. நேரத்திற்கு சென்று மக்களை சந்திக்க முடியவில்லை. எனவே தனியாக வாகனம் நிறுத்துவதற்கு 'பார்க்கிங் வசதி' செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அதேபோல் நடந்து செல்வோருக்கும் தனியாக நடப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும்.

சுமித்ரா (திருமுருகன்பூண்டி):-

திருப்பூர் குமரன் ரோட்டில் வாகனங்களை வாகன ஓட்டிகள் ரோட்டு மேல் நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இதன்காரணமாக நடந்து செல்பவர்களுக்கு போதிய இடம் இருப்பதில்லை. இதனால் மக்கள் நடந்து செல்வதற்கு சிரமம் அடைகின்றனர். ஒருசில நேரங்களில் சிலர் வாகனங்களில் அதிக வேகத்தில் செல்லும்போது ரோட்டில் செல்வதற்கு பயமாக இருக்கிறது. விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் எடுத்து வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குப்படுத்த வேண்டும். மேலும் கடைகளுக்குள் பார்க்கிங் வசதியை கண்டிப்பாக செய்து கொடுக்க வேண்டும்.

கலைவாணி (திருப்பூர்):-

வாகனங்களை கடைகளுக்கு முன் நிறுத்திவிட்டு செல்வதால் இடவசதி குறைகிறது. இதனால் கைக்குழந்தையுடன் இந்த குமரன் ரோட்டில் நடந்து செல்வதற்கு பயமாக உள்ளது. எங்கே வாகனங்கள் வந்து நம்மீது மோதிவிடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையை கடப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. எனவே இதற்கு தீர்வு காண ரோட்டை அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைந்து மக்கள் நடந்து செல்ல இடம் கிடைக்கும்.

சிதம்பரம் (ரோட்டரி மாவட்ட பொறுப்பாளர்-திருப்பூர்):-

திருப்பூரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகளும் நடந்து வருகிறது. இதனால் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே திருப்பூரில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கி, இதற்கென கட்டணம் வசூலித்தால்கூட போக்குவரத்து நெரிசல் குறையும்.

மேலும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். ஆங்காங்கே கடைகளுக்கு முன் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லகூடாது. இதன்மூலம் விபத்துகளும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

மதுசுதன், (ஓட்டல் பங்குதாரர்):-

காட்டன் மார்க்கெட் அருகே ஓட்டல் நடத்தி வருகிறோம். எங்களது ஓட்டலுக்கு என தனியாக வாடகை பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆனால் எங்களுடைய கடைக்கு வருகிறவர்கள் மட்டுமல்லாமல் காட்டன் மார்க்கெட் வளாகத்திற்கு செல்பவர்களும் தங்களுடைய வாகனங்களை இங்கு நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும் சிலர் பார்க்கிங்-ல் வாகனத்தை நிறுத்தாமல் ரோட்டின் அருகில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனை தடுப்பதற்கு முயற்சி செய்தும் மக்கள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வியாபாரம் செய்ய சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்கள் எங்கே போகிறார்களோ அங்கே சென்று ஓரமாக வாகனங்களை நிறுத்தினால் நன்றாக இருக்கும். மேலும் அரசு இதற்கென தனியாக கட்டண வாடகை நிறுத்துமிடத்தை ஏற்படுத்தினாலும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். அப்போதுதான் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு இருக்கிறது.

வினோத்குமார் (தெற்கு போக்குவரத்து போலீஸ்):-

கடந்த 2013-ம் ஆண்டு திருப்பூர் தனி மாவட்டம் ஆனதுக்கு பிறகு 10 மடங்கு அதிகமான வாகனங்கள் அதிகரித்துள்ளது. ஆனால் திருப்பூரில் உள்ள சாலைகள் அகலம் குறைவாகவே உள்ளது. எனவே போக்குவரத்தை சீரமைக்க சாலையின் அகலத்தை விரிவுப்படுத்த வேண்டும். தற்போது மக்கள் வாகனங்களை தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல விரும்புவதில்லை. தாங்கள் போகும் கடைமுன் வாகனத்தை நிறுத்தவே விரும்புகின்றனர். அதனால் கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்களுக்கென பார்க்கிங் வசதி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

போக்குவரத்து போலீசார் பங்கில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கிறோம். ஆனாலும் பொதுமக்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 1000-த்திற்கும் அதிகமாக பார்க்கிங் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுகிறது.

இவ்வாறு பொதுமக்கள், கடைக்காரர் மற்றும் போக்குவரத்து போலீசார் தங்கள் கருத்துகளை கூறினார்கள்.

--------

பாக்ஸ்:-

ஒரு தேசிய நெடுஞ்சாலையின் அகலம் ஒருவழிப்பாதை என்றால் 9 மீட்டர் இருக்க வேண்டும். இருவழிப்பதை என்றால் 18 மீட்டர் இருக்க வேண்டும். ஆனால் திருப்பூரில் பெரும்பாலான சாலைகள் ஒருவழிப்பாதை என்றால் 5½ மீட்டர் முதல் 7 மீட்டர் வரை மட்டுமே இருக்கிறது. இருவழிப்பாதை என்றால் 11 மீட்டர் முதல் 14 மீட்டர் வரை மட்டுமே இருக்கிறது. மேலும் போக்குவரத்து போலீசாரின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதனால் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கட்டுப்படுத்த ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. இதன்காரணமாக எல்லா மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்