ராமையன்பட்டியில் பரி வேட்டை நிகழ்ச்சி
நெல்லை ராமையன்பட்டியில் பரி வேட்டை நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 10-ம் நாளான நேற்று விஜய தசமியையொட்டி சுவாமி நெல்லையப்பர், சந்திரசேகரராக வெள்ளி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் நெல்லை ராமையன்பட்டி பகுதியில் பரிவேட்டை நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சுவாமியுடன் நெல்லை நகர எல்லை வரை நெல்லையின் காவல் தெய்வமான பிட்டாபுரத்தி அம்மன் சென்றார்.
ராமையன்பட்டி எல்லையில் வன்னி மரத்திற்கு அம்பு விட்டு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் நெல்லையப்பர், பிட்டாபுரத்தி அம்மனுக்கு காட்சி கொடுக்க அம்பாள் 3 முறை சுவாமியை வலம் வந்து அருள் பெற்றார். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.