மாணவர்களுக்கு குடிநீர் வசதிக்கோரி பள்ளியில் பெற்றோர்கள் போராட்டம்
குடியாத்தம் அருகே மாணவர்களுக்கு குடிநீர் வசதிக்கோரி பள்ளியில் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் அருகே மாணவர்களுக்கு குடிநீர் வசதிக்கோரி பள்ளியில் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீரின்றி மாணவர்கள் அவதி
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த செதுக்கரை பொன்னம்பட்டி பகுதியில் 400-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 96 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பொன்னம்பட்டி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீரும், உப்பு தண்ணீரும் வினியோகம் செய்யவில்லை என்றும், மேலும் பள்ளிக்கும் குடிநீர் வினியோகம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் நல்ல குடிநீர் கிடைக்காமலும், உப்பு நீருக்காகவும் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும் கூறி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றனர்.
குடிநீர் பிரச்சினை குறித்து கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி கூறுகையில், 'பொன்னம்பட்டி பகுதிக்கு இந்திரா நகர் ஆற்றில் இருந்து பைப்லைன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அப்பகுதியில் தொடர் மணல் திருட்டால் குடிநீர் பைப்புகள் சேதப்படுத்தப்படுகிறது. அதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் போர்வெல் போட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டிராக்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என்றார்.