அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் இருக்கைகள் வழங்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை
காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக இருக்கைகள் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி,
கூடுதல் இருக்கைகள்
காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியாக இயங்கி வரும் இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர்-ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு படித்து வரும் மாணவர்களுக்கு போதியளவில் இருக்கைகள் மற்றும் மேஜை இல்லாமல் பற்றாக்குறையான நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் பல்வேறு கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தாலும் கூட எவ்வித நடவடிக்கையும் இல்லை.
சேதமான இருக்கைகள்
மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மேஜை மற்றும் இருக்கைகள் செய்து தருவதற்கு காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி நிதியில் இருந்து பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கூட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் பெரும் முயற்சியால் ஏற்கனவே மாணவர்கள் பயன்படுத்தி சேதமான நிலையில் குவிக்கப்பட்டிருந்த சில மேஜைகள், இருக்கைகளை மீண்டும் எடுத்து வந்து பழுது பார்த்து வர்ணம் பூசிய நிலையில் தயார் செய்து வருகின்றனர். இருப்பினும் அவற்றின் தரம் எந்தளவிற்கு இருக்கும் என்பது தெரியாது.
நடவடிக்கை
இதுகுறித்து சமூக ஆர்வலர் புதுமைமகேந்திரன் கூறியதாவது:- காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு பல்வேறு வசதிகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து தர முன்வர வேண்டும். தற்போது இங்கு ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான இருக்கை மற்றும் மேஜை வசதிகள் இல்லாத நிலையில் அவற்றை செய்து தருவதற்கு அரசியல் பிரமுகர்கள், மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வந்தாலும் கூட அவற்றிற்கு முறையான அனுமதியை கல்வித்துறை அதிகாரிகள் கொடுப்பதில்லை.
எனவே மாணவர்களுக்கான இருக்கை மற்றும் ேமஜை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.