மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும்
அரசு மற்றும் பிற பள்ளிகளில் ஏற்படும் மாணவர்களின் உயிர்பலியை தடுக்க மதிய இடைவேளையின் போது மாணவர்களின் செயல்பாடுகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மானாமதுரை,
அரசு மற்றும் பிற பள்ளிகளில் ஏற்படும் மாணவர்களின் உயிர்பலியை தடுக்க மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடரும் அசம்பாவிதங்கள்
தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து வரும் சம்பவமும், சில சமயங்களில் கவன குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டு மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாணவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
சில சமயங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதிய உணவு இடைவேளையின் போது மதிய உணவு சாப்பிட்ட பின்னர் சில மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரியாமல் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே சென்று அங்குள்ள கடைகளில் தின்பண்டங்கள் வாங்குவதும், சில மாணவர்கள் வெளியே உள்ள மரங்களில் ஏறி ஆபத்தான நிலையில் விளையாடுவதும் என உள்ளனர். இதனால் சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு கேள்விக்குறியாக அமைந்துவிடுகிறது.
கவனக்குறைவு
நேற்று முன்தினம் மானாமதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் பொழுதுபோக்கிற்காக பள்ளியை விட்டு வெளியே சென்று அருகில் உள்ள மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்த போது கிளை முறிந்து அருகில் சென்ற மின்சார ஒயர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பள்ளியில் உள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்தை மீறி நடந்துள்ளது.
எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உணவு இடைவேளையின் போது பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.