திருமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு- அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

திருமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-11 20:39 GMT

 திருமங்கலம், 

திருமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிக்கல்

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராயபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் 42 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பள்ளி தலைமையாசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதால் சரிவர மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் கல்வி கற்க முடியவில்லை என தங்கள் பெற்றோர்களிடம் கூறி வந்தனர். பெற்றோர்களும் இது குறித்து ஆசிரியர்களிடம் கூறி இருந்தனர். ஆனால் தொடர்ந்து ஆசிரியர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கல்வி பயில்வதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் நேற்று ராயபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பயிலும் மாணவ. மாணவிகளின் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ராயபாளையத்தில் உள்ள ஒரு சாவடியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை அமர வைத்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் வளர்மதியிடம் கேட்டனர். தலைமையாசிரியர் உரிய பதில் அளிக்காததால் வட்டார உதவி கல்வி அலுவலர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என தெரிவித்தனர். இதையடுத்து ராயபாளையம் கிராம மக்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் ஆகியோரிடம் வட்டார உதவிக்கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாதிப்பு

பேச்சுவார்த்தைக்கு பின்பு ஒரு ஆசிரியரை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல் சம்பவம் நடந்தால் குழந்தைகளை பள்ளிக்கு நிரந்தரமாக அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும்போது,

அடிக்கடி ஆசிரியர்களுக்குள் தகராறு நடப்பதால் பிள்ளைகளுடைய கல்வி பாதிக்கப்படுகிறது. ஆதலால் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்