பாதையை மீட்டுத்தர கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் மறியல்
இலுப்பூர் அருகே பாதையை மீட்டுத்தர கோரி பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொது பாதை அடைப்பு
இலுப்பூர் அருகே மெய்யக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்கள் அழகன், முத்துலெட்சுமி, லெட்சுமி, வள்ளிக்கண்ணு, நாகம்மாள். இவர்களது வீட்டின் அருகே பொதுபாதை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனை இவர்களும், அப்பகுதி பொதுமக்களும் பயன்படுத்தி வந்த நிலையில், இந்த பாதையை பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்தநிலையில் அந்த பொதுபாதையை திடீரென தனிநபர் ஒருவர் அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பாதையில் சென்று வந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நீண்ட தூரம் சென்று மாற்றுபாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை மறியல்
மேலும் பாதையை அடைத்ததால் அவ்வழியாக செல்ல வேண்டிய குடிநீர் குழாய் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பொது பாதையை வருவாய்த்துறையினர் மீட்டுத்தர வேண்டும் என கோரி அழகன் உள்ளிட்ட 5 பேரும் பள்ளி மாணவர்களுடன் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் தாலுகா அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் ரமேஷ், இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்கு
பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முன் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அழகன், முத்துலெட்சுமி, லெட்சுமி, வள்ளிக்கண்ணு, நாகம்மாள் உள்ளிட்ட 5 பேர் மீது இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.