பரமக்குடி வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
பரமக்குடி வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வருவாய்த்துறையினர் அதை கண்காணித்து வருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வருவாய்த்துறையினர் அதை கண்காணித்து வருகின்றனர்.
தண்ணீர் திறப்பு
வைகை அணை பகுதியில் அதிக மழை பெய்வதன் காரணமாக வைகை அணையானது 70 அடியை கடந்துள்ளது. ஆகவே தற்போது ஆண்டின் மூன்றாவது முறையாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திறக்கப்பட்ட வைகை அணை தண்ணீரானது பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் வந்தது. அதை வைகை ஆற்றின் வழியாக பார்த்திபனூர் மதகு அணையில் உள்ள 11 கலுங்கு வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியில் வலது பிரதான கால்வாயில் 800 கன அடியும் இடது பிரதான கால்வாயில் 1000 கன அடி தண்ணீரும் முதுகுளத்தூர் செல்லும் வெள்ளப்போக்கி கால்வாயில் 1000 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
கரை புரண்டு ஓடுகிறது
தண்ணீரானது பரமக்குடி வைகை ஆற்றில் கரை புரண்டு ஓடுகிறது. அந்த தண்ணீரை பொதுமக்களும் குழந்தைகளும் ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். பொதுமக்களின் பிரதான போக்குவரத்து பாதையாக இருக்கும் தரைப்பாலம் பகுதியில் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் ஆற்றுப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.3-வது முறையாக கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் விவசாயிகளும், பரமக்குடி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.