மடத்துக்குளம் அருகே மழை வேண்டி பாறையில் கஞ்சி ஊற்றி சாப்பிட்டு பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
பழமையான கோவில்
அனைத்து உயிர்களின் வாழ்விலும் மழையே பிரதானமாக உள்ளது.மாரியில்லாமல் காரியமில்லை என்பது பழமொழியாகும். எனவே மழையை வரவேற்க ஒவொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட மடத்துக்குளம் பகுதியில் நூதன வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மடத்துக்குளத்தையடுத்த சாமராயப்பட்டியில் பாப்பம்பாறை என்ற பாறைக்குன்றின் மீது 100 ஆண்டுகள் கடந்த கல்யாண விநாயகர், சுப்பிரமணியர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது.
பாறை மீது கஞ்சி
மடத்துக்குளம் பகுதியில் தென்மேற்குப் பருவமழை கைவிட்ட நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிக்கும் நிலை உள்ளது.எனவே வடகிழக்குப் பருவமழை கைகொடுக்க வேண்டும்.விவசாயம் செழிக்க வேண்டும்.அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நேற்று இந்த கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். குறிப்பாக மழை வேண்டி இந்த நூதன வழிபாடு நடத்தப்பட்டது.
கோவிலின் முன் கஞ்சி காய்ச்சி இலை, பாத்திரங்கள் எதுவும் இல்லாமல் பாறை மீது ஊற்றி பக்தர்கள் சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.இந்த வழிபாடு நடத்தினால் நல்ல மழை பெய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.அந்தவகையில் வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வானம் கருத்து மழைக்கான அறிகுறிகள் தெரிந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.