பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் சோமனஅள்ளி கிராமத்தில் தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழா நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் வெண்ணிலா வரவேற்றார். கோவை வேளாண் விரிவாக்க கல்வி இயக்கக தலைவர் பேராசிரியர் ஆனந்தராஜா பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஜீவஜோதி தலைமை தாங்கி பேசுகையில், விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்றால் தான் விவசாயம் சிறப்படையும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது. ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் படித்த விஞ்ஞானிகள் தரும் தகவல்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மூலம் விவசாயிகள் தங்கள் செலவினங்களை குறைத்துக் கொண்டு அதிக மகசூலை பெற முடியும். தக்காளி மற்றும் பிற பயிர்களில் இத்தகைய உத்திகள் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்று பேசினார். இதில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நூற்புழுவியல் துறை பேராசிரியர் சாந்தி, பல்கலைக்கழக மேலாண்மை குழு உறுப்பினர் கோவிந்தராஜன், தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியங்கா, துணை இயக்குனர் மாலினி, அதியமான் துல்லிய பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ், பேராசிரியர்கள் சண்முகம், சீனிவாசன், வேளாண் விஞ்ஞானிகள் சசிகுமார் தெய்வமணி இளைய பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு வழங்கப்பட்டது.