பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி

Update: 2022-11-20 15:22 GMT


பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பஞ்சலிங்க அருவி

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளது. இந்த ஆறுகள் பல்வேறு விதமாக வனப்பகுதியில் ஓடி வந்து பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.

நீர்வழித்தடங்களில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் நறுமணத்தையும் அளிக்கிறது. இதனால்தண்ணீர் உடலின் மேல் விழும்போது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு ெபறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

குளிப்பதற்கு அனுமதி

இந்த சூழலில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த வாரம் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வந்தது.இதனால் அருவியில் தண்ணீர் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதுடன் நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மேலும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் பலத்த மழை பெய்வதற்கான சூழலும் நிலவி வந்தது. இதன் காரணமாக பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

இந்த சூழலில் அருவி இயல்பு நிலைக்கு திரும்பியதையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலாபயணிகள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருந்தது. ஆனாலும் அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள்தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்