இருசக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கும் பண்ருட்டி பேருந்து நிலையம் போலீசார் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை

இருசக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்பால் பண்ருட்டி பஸ் நிலையம் சிக்கித்தவிக்கிறது. இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-22 18:45 GMT

பண்ருட்டி 

கடலூர் மாவட்டத்தில் மிக முக்கிய நகரங்களில் ஒன்று பண்ருட்டி. இங்கிருந்து தினசரி சுற்றுப்புற கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கடலூரில் இருந்து சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களும், சென்னையில் இருந்து தஞ்சாவூா், கும்பகோணம் செல்லும் பஸ்களும் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்து தான் செல்ல வேண்டும். இதனால் பண்ருட்டி பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்பட்டு பஸ்கள் நிறுத்துவதற்கு வசதியாக இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள்

ஆனால் தற்போது பஸ்கள் நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் இருசக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதாவது வெளியூர் செல்பவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை பேருந்து நிலையத்திலேயே நிறுத்திவிட்டு பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் டிரைவர்கள் பஸ்சை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த முடியாததால், தங்களுக்கு ஏற்றார்போன்ற இடத்தில் தாறுமாறாக நிறுத்திவிடுகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்துக்கிடக்கும் பயணிகள் தங்கள் பஸ்கள் இருக்கும் இடத்தை தேடி அலைந்து திரிவதை காணமுடிகிறது.

பயணிகள் அவதி

பண்ருட்டியில் போக்குவரத்தை சீரமைப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து காவல் நிலையம் தனியாக கொண்டுவரப்பட்டது ஆனால் போக்குவரத்து காவல் நிலையம் அமைத்தும் காவலர்கள் பணி சரிவர செய்யப்படாததால் போக்குவரத்து பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பஸ் நிலையத்தின் உள்ளே புறக்காவல் நிலையம் இருந்தும் இது மாதிரியான ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படவில்லை. மேலும் பஸ் பயணிகள் பஸ்களுக்காக காத்திருக்க இட வசதி இல்லாததால் அவர்கள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோரிக்கை

இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக பஸ் நிலையத்தை சுற்றி 3-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இருந்தும் அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதில்லை. எனவே பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ராஜாஜி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுகிறது. இதைதடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்