பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
அரியலூரில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம் சிந்தனை தாலுகா தளவாய் கிராமத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
முன்னதாக தளவாய் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அமைச்சர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் மதியம் 1 மணி வரையில் 1,205 பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
இதில் 578 ஆண்களும், 627 பெண்களும் அடங்குவர். இதில் அதிகப்படியாக பொது மருத்துவப்பிரிவில் பொதுமக்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரியலூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நலப்பணிகள் இணை இயக்குனர் அசோகன், செந்துறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி சாமிதுரை, துணை இயக்குனர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கீதா சுப்ரமணியன், சுதா சுரேஷ், தளவாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், வட்டார மருத்துவ அலுவலர் அசோகசக்ரவர்த்தி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.