பண்ணாரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

கோத்தகிரியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-04-06 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

தேர்த்திருவிழா

கோத்தகிரி கடை வீதியில் பழமை வாய்ந்த பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூக்குண்டம் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது. பின்னர் பூ குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பூ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

அபிஷேக பூஜை

திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் கோவிலில் 13-ம் ஆண்டு தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு அபிஷேக பூஜையும், மதியம் 12 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் காம்பாய் கடை, பஸ் நிலையம், மாரியம்மன் கோவில், கடைவீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திரு வீதி உலா

நேற்று அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இன்று(வெள்ளிக்கிழமை) சிம்ம வாகனத்திலும், நாளை (சனிக்கிழமை) புலி வாகனத்திலும் வீற்றிருந்து திரு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 9-ந் தேதி அம்மனை ஆற்றங்கங்கரையில் வழியனுப்பும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி மஞ்சள் நீராடல் மற்றும் மறு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்