பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா:பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவித்துள்ளார்.

Update: 2023-05-10 18:45 GMT

ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருவிழா

ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலயத்தின் 67-வது உற்சவ திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு நான்கு சக்கர வாகனங்களில் ஜோதி கொண்டு வரும்போது ஒரு நபர் மட்டுமே ஜோதியுடன் நடந்துவர அனுமதிக்கப்படுவர். மற்ற இளைஞர்கள் நடந்து வரும்போது கம்பு, அருவாள், கத்தி, ஈட்டி, வாள் போன்ற ஆயுதங்கள் எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது. மீறும்பட்சத்தில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் வழக்குகளும் பதிவு செய்யப்படும். திருச்செந்தூரிலிருந்து மாவீரன் ஊமைத்துரை தொண்டர்படை சார்பாக எடுத்து வரப்படும் ஜோதியுடன் ஒரு வாள் மட்டும் எடுத்துவர அனுமதிக்கப்படுகிறது. வாகனங்களில் ஜோதி கொண்டு வரும்போது கண்டிப்பாக மற்ற சமுதாயத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும்படி எவ்வித கோஷங்களையும் எழுப்பக்கூடாது. தேவையில்லாமல் வரும் வழியில் ஜோதியை நிறுத்தி கூட்டத்தை கூட்டி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

வழித்தடம்

விழாவில் கலந்து கொள்ள குறுக்குச்சாலை வழியாக வரும் வாகனங்கள் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களான குறுக்குச்சாலை, கக்கரம்பட்டி விலக்கு, மீனாட்சிபுரம், ஒட்டப்பிடாரம் பஜார் வழியாக பாஞ்சாலங்குறிச்சி வரவேண்டும். புதியம்புத்தூர் மற்றும் ஓசநூத்து வழியாக வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடமான ஓட்டப்பிடாரம் வழியாக பாஞ்சாலங்குறிச்சி வர வேண்டும். பசுவந்தனை வழியாக வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடமான கீழமுடிமண் வழியாக பாஞ்சாலங்குறிச்சி வர வேண்டும்.

வாகனங்களில் ஜோதி கொண்டு வரும் நபர்கள் பற்றிய விவரத்தை சரியான முகவரியுடன் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கும், ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்துக்கும் தெரிவிக்க வேண்டும். வாகனங்களின் மேற்கூரைகளில் அமர்ந்து செல்லக்கூடாது.

வாகனங்களில் ஒலிப்பெருக்கி எதுவும் பொருத்தக்கூடாது. இருசக்கர வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. வாகனங்களில் வருபவர்கள் திறந்தவெளி வாகனங்களில் வருவதற்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி எதுவும் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனைத்து வாகனங்களும் பாஞ்சை சந்ததியினர் காலனிக்கு மேல்புறம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படா வண்ணம் போலீசாரால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக விழா கமிட்டியாளர்கள் 'வாகனம் நிறுத்துமிடம்' என தகவல் பலகை வைக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் போலீசாரின் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஒத்துழைப்பு

வருகிற 14-ந் தேதி காலையுடன் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் இதர பூஜைகளையும் நடத்தி விழாவை அமைதியாக முடித்துக் கொள்ள வேண்டும். விழா கமிட்டியாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். விழாவுக்கு வாடகை வாகனங்களில் வரக்கூடாது. ஜோதி எடுத்து வருபவர்கள் நாளை மறுநாள் மாலை 6.30 மணிக்குள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் கொண்டு வர வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், வீரசக்கதேவி ஆலய விழாக்களை எவ்தவித அசம்பாவிதமும் இன்றி விழாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்