வேகமாக தயாராகி வரும் பஞ்சப்பூர் பஸ் நிலையம்

திருச்சியில் வேகமாக பஞ்சப்பூர் பஸ் நிலையம் தயாராகி வருகிறது.

Update: 2023-09-29 19:40 GMT

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்

சென்னையில் இருந்து புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கு திருச்சியை கடந்து தான் செல்ல வேண்டும். பூகோள ரீதியில் தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கி வருவதால் வெளியூர் பயணிகள் அதிகமானோர் திருச்சிக்கு வந்து செல்கிறார்கள். இதனால் திருச்சியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்து வருகிறது. மாநகருக்குள் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருச்சி வாழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும்.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதியிலும் பட்ஜெட்டிலும் அறிவித்தபடி, திருச்சி-மதுரை சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மற்றும் கனரக சரக்கு வாகன முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையமாக உருவாக்கும் நோக்கில் இதற்காக அங்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 40 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டது.

சரக்கு முனையம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி பஸ் நிலைய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். 2022-ம் ஆண்டு அக்டோபரில் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக தொகுப்பு-1, தொகுப்பு-2 என 2 கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட திட்டப்பணிகளில் ரூ.243 கோடியே 78 லட்சத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையமும், ரூ.106 கோடியே 20 லட்சத்தில் கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்படுகிறது.

இதில் பயணத்துக்கு தயார் நிலையில் உள்ள பஸ் நிறுத்தங்கள் 124, வெகுநேர பஸ் நிறுத்தங்கள் 142, குறைந்தநேர பஸ் நிறுத்தங்கள் 78, நகர பஸ் நிறுத்தங்கள் 60 என மொத்தம் 404 பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தரை கீழ்தளத்தில் 175, தரைதளத்தில் 805 என 980 இருசக்கர வாகனங்களும், தரை கீழ்தளத்தில் 110, தரைதளத்தில் 156 என 266 நான்குசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

நகரும் படிக்கட்டுகள்

இதைத்தவிர, உணவகம், கழிவறை கட்டிடம், 820 பயணியர் இருக்கைகள், 2 பாதுகாவலர் அறை மற்றும் 2 தகவல் மையம், 2 பயணச்சீட்டு முன்பதிவு அறை, பயணியர் பொருட்கள் பாதுகாப்பு அறை, 2 நகரும் படிக்கட்டுகள் (எக்ஸ்லேட்டர்கள்), 3 லிப்ட் வசதி ஆகியவையும் கட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் 5.20 ஏக்கர் பரப்பளவில் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தரை கீழ்தளத்தில் 500 இருசக்கர வாகனங்களும், 160 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்த முடியும். இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் 149 கடைகளும், முதல்தளத்தில் 44 கடைகளும் கட்டப்படுகிறது. நவீன கழிவறை கட்டிடம், ஏறி இறங்க வசதியாக 2 நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்), 4 லிப்ட் வசதியும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆய்வு

இதேபோல் தொகுப்பு 2-ல் 29 ஏக்கர் பரப்பளவில் கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 256 சரக்கு வாகனங்களை நிறுத்த முடியும். மேலும் வணிக நோக்க கட்டிடங்களும், சிற்றுண்டி உணவகம், பாதுகாவலர் அறை, நவீன கழிவறை கட்டிடம், உயர்கோபுர மின்விளக்குகள், தரைதள நீர்த்தேக்க தொட்டி, கான்கிரீட் சாலைகள் ஆகியவை அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் பிப்ரவரி மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு தீயணைப்பு மையம், காவல்துறை சோதனைச்சாவடி என பல்வேறு அம்சங்களும் இடம் பெறுகிறது. கிட்டத்தட்ட 700 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த திட்டத்தின் முக்கியத்துவம் கருதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவ்வப்போது பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ்நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டு விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த பஸ் நிலையத்தை வருகிற நவம்பர் மாதத்தில் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்