தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா:1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-26 18:45 GMT

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், முக்கியமான 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.

ஆய்வு

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் ஆலய வளாகத்திலும், அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை கூட்டத்தின் போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ், வெங்கடேஷ், லோகேசுவரன், அருள், ஜெயச்சந்திரன், புருஷோத்தமன், ஜெயராம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

பலத்த பாதுகாப்பு

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 34 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் தூத்துக்குடி, நெல்லை, தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

விழாவின் போது, திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், பழைய குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ரகசியமாக கண்காணிக்க 110-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் போலீசார் சாதாரண உடையில் பொதுமக்களோடு மக்களாக கலந்து ஆங்காங்கே தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆங்காங்கே 50 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு கோபுரம்

வருகிற 5-ந் தேதி தங்கத்தேர் பவனி நடக்கிறது. அன்று பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 4 கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களது குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், மேலும் தங்க நகைகளை அணியும்போது உடைகளுடன் சேர்த்து ஊக்கு போன்றவற்றால் பின் செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். மேற்படி குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க போலீசார் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்