பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-08-04 18:45 GMT

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பனிமயமாதா ஆலய திருவிழா

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டு 441-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (சனிக்கிழமை) தங்கத் தேர் பவனி நடக்கிறது. இதில் 53 அடி உயர தங்கத் தேரில் பனிமயமாதா நகர வீதிகளில் பவனி வருகிறார்.

இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் 6 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 23 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 57 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் தூத்துக்குடி, நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் போலீசார் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ் (தூத்துக்குடி நகரம்), சுரேஷ் (ஊரகம்), வசந்த்ராஜ் (திருச்செந்தூர்), வெங்கடேஷ் (கோவில்பட்டி), லோகேஸ்வரன் (மணியாச்சி), அருள் (சாத்தான்குளம்), ஜெயச்சந்திரன் (விளாத்திகுளம்), புருஷோத்தமன் (ஆயுதப்படை), ஜெயராம் (மாவட்ட குற்றப்பிரிவு), சம்பத் (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு), ஜெயராஜ் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்