புதுக்கோட்டையில் பயங்கரம்: சொத்து தகராறில் தொழிலாளி வெட்டி படுகொலை
புதுக்கோட்டையில் சொத்து தகராறில் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
புதுக்கோட்டை சண்முக நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 45), தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 4 பேர் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில், படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறில் தமிழ்செல்வன் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.