மருதமலை கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

மருதமலை கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-05 18:45 GMT

கோவை

மருதமலை கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர திருவிழா

கோவை மாவட்டம் மருதமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. பங்குனி மாதம் வரும் பவுர்ணமியன்று அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதன்படி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கோபூஜையுடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால்குடம், காவடிகள் மூலம் சுப்பிரமணியசுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே பால்குடம், காவடி எடுத்து வந்து கோவிலில் காத்திருந்தனர். நடை திறந்தவுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

வீதி உலா

காலை 8 மணிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகை வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, பாலாபிஷேகம், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் அர்த்தமண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கோவிலைச் சுற்றி வீதி உலா வந்தார். மாலை 6 மணிக்கு சாயரட்ச பூஜை, அதை தொடர்ந்து தங்கரதத்தில் சுப்பிரமணியசாமி வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார்.

வாகனங்களுக்கு அனுமதியில்லை

இதேபோல இடும்பன் சன்னதியில் இடும்பன் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.விழாவையொட்டி மலைக்கோவில் மீது செல்வதற்கு 2 சக்கர, 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதற்கு பதிலாக மலைக்கோவில் செல்வதற்குகோவில் சார்பில் மினி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை ஆணையர் ஹர்சினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்