ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2023-03-27 18:45 GMT

திருவட்டார், 

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடி கயிறு ஊர்வலம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா காவில் இருந்து கொடிக்கயிறு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

இந்த ஊர்வலம் மேளதாளம் முழங்க பல்வேறு இந்து இயக்கத்தினர், பக்தர்கள் புடைசூழ ஆற்றூர், கழுவன்திட்டை, சந்தை சந்திப்பு வழியாக கோவிலை அடைந்தது. பின்னர் கோவில் பிரகாரம் மற்றும் கருவறையை சுற்றி வந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் ஆதிகேசவ பெருமாள் முன்பு கொடிக்கயிறு சமர்ப்பிக்கப்பட்டது. திருவிழாவின் முதல் நாளான நேற்று காலையில் நிர்மால்ய தரிசனம், ஹரிநாம கீர்த்தனத்தை, சிறப்பு அபிஷேகம் போன்றவை நடந்தது.

கொடியேற்றம்

காலை 9 மணிக்கு வாத்தியங்கள் முழங்க, சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்று விழா பூஜைகளை கோவில் தந்திரி சஜித் சங்கரநாராயணரு நடத்தினார். குழித்துறை தேவசம் சூப்பிரண்டு சிவகுமார், கோவில் மேலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் தீபாராதனை, இரவு நாற்காலி வாகனத்தில் சாமி பவனி வருதல் ஆகியவை நடந்தது.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு நவநீத நாராயணீய சமிதி வழங்கும் நாராயண பாராயணம், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி போன்றவையும், நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 6 மணிக்கு நம்மாழ்வார் குறித்து ஆன்மிக சொற்பொழிவு, இரவு 7.45 மணிக்கு தேவார பஜனை, இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி ஆகியவையும் நடக்கிறது.

ஆராட்டு விழா

வருகிற 31-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 7.30 மணிக்கு பரத நாட்டியம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் ஆகியவையும், 3-ந் தேதி இரவு 9 மணிக்கு நாற்காலி வாகனத்தில் சாமி பவனி வருதல், இரவு 10.30 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளியும் நடக்கிறது. 4-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, 9.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், 12 மணிக்கு கிராதம் கதகளி ஆகியவையும், விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி ஆராட்டு விழாவுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல் போன்றவையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்