கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்-தரையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது தரையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-27 20:19 GMT

தர்ணா போராட்டம்

சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டி காந்திநகர் காலனியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு அளித்த 200-க்கும் மேற்பட்ட மனுவை ஒரு கட்டாக கட்டி கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் குறித்து தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வீட்டுமனை பட்டா

எங்கள் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 1982-ம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை மூலம் சுமார் 60 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக எங்களது கிராமம் அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. ஆனால் இந்த நிலம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அரசுக்கு சாதமாக தீர்ப்பு வந்தது. ஆனால் இதுவரை எங்களுக்கு அதிகாரிகள் அந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இதற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களுக்கு விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்களில் சிலர் கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

மேலும் செய்திகள்