ஊராட்சி தலைவர் ரூ.40 லட்சம் முறைகேடு செய்ததாக வழக்கு
ஊராட்சி தலைவர் ரூ.40 லட்சம் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தர்மத்துப்பட்டி ஊராட்சித்தலைவராக மருதமுத்து உள்ளார். இவர், கிராம மக்களின் சுகாதார நடவடிக்கைக்கான பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் வாங்கியதாக பல்வேறு போலி ரசீது, ஆவணங்கள் தயாரித்து ஊராட்சி நிதி பல லட்சம் ரூபாயை முறைகேடாக பெற்றுள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அதன்பேரில் ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அதிகாரி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, ஊராட்சி நிதி ரூ.40 லட்சத்து 30 ஆயிரத்து 886 முறைகேடு செய்யப்பட்டதாக மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை அளித்தார். அதன்பின்பும் ஊராட்சி தலைவரிடம் இருந்து ஊராட்சி நிதி மீட்கப்படவில்லை. அவரது முறைகேடு தொடர்ந்து வருகிறது. எனவே அரசின் நிதியை முறைகேடு செய்த தர்மத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மீது திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்கவும், நிதியை மீட்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் மயில்வாகன ராஜேந்திரன் ஆஜராகி, வட்டார வளர்ச்சி அதிகாரி விசாரணை அறிக்கையின்பேரில், ஊராட்சி தலைவர் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதன்மூலம் ஊராட்சி தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தரப்பில் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.