உரிய அதிகாரம் கோரி ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசின் நிதி மற்றும் உரிய அதிகாரம் வழங்கக்கோரி தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-09-14 21:59 GMT

சென்னை,

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசின் நிதி மற்றும் உரிய அதிகாரம் வழங்கக்கோரி தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எம்.முனியாண்டி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது எஸ்.எம்.முனியாண்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஊராட்சி மன்ற தலைவர்களாக பொறுப்பேற்று பல மாதங்கள் ஆகியும் இன்னமும் எங்களுக்கு அதிகாரம் வழங்கப்படாமலேயே இருக்கிறது. எங்களுக்கான அரசின் நிதியை முறையாக வழங்காமல் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஊராட்சிகளுக்கு அளிக்கவேண்டிய வீட்டுவரி ஈட்டு மானியம், முத்திரைத்தாள் கட்டணம், மீன் பாசி (ஏலம்) தொகை, ஈமகிரியை மானியம் போன்றவற்றை வழங்காமல் வைத்திருக்கிறார்கள். நிதி கிடைக்காததால் மக்கள் பணியை தொடங்க முடியாமல் இருக்கிறோம்.இதனால் பொதுமக்கள் எங்கள் மீது கோபம் கொள்ளும் சூழல் இருக்கிறது. மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காலகட்டத்தில் தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் இன்னமும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதனால் எங்கள் அதிகாரங்கள் பறிக்கப்படுகிறது.எனவே எங்களுக்கான அதிகாரத்தையும், உரிய நிதியையும் உடனடியாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்