குடிநீர் வராததை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
வாய்மேடு அருகே குடிநீர் வராததை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே குடிநீர் வராததை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்
வேதாரண்யம் தாலுகா பகுதிகளில் பல ஊராட்சிகளில் கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் வராததை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுருபாண்டியன் தலைமையில், தென்னடார் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசெந்தில், தகட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, தாணிக்கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், கடினல்வயல் ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தகட்டூர் கடை தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் கோபிநாத், உதவி பொறியாளர் விவேகானந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் தாசில்தார் ஜெயசீலன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் வராத ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் நாளை முதல் தொடர்ந்து பழையபடி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர். அதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.