அடிப்படை வசதிகள் செய்ய ஊராட்சி நிர்வாகம் மறுப்பு
பெரியகுளம் அருகே கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்ய ஊராட்சி நிர்வாகம் மறுப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
பெரியகுளம் அருகே குள்ளப்புரம் ஊராட்சி மருகால்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், "எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு ஊராட்சி நிர்வாகத்தில் கூறினாலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. பொது கழிப்பிடத்துக்கு ஆழ்துளை கிணறு மூலம் இணைப்பு கொடுக்காமல், பொது குடிநீர் குழாயில் இருந்து இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் குறித்தும், ஊராட்சி தலைவரின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறியிருந்தனர்.