பேரையூர் பகுதியில் பனங்கிழங்கு சீசன் தொடக்கம்

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதிகளில் பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. ஆரோக்கியம் தரும் பனங்கிழங்கை நகர்ப்புற மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Update: 2022-11-14 19:59 GMT

பேரையூர், 

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதிகளில் பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. ஆரோக்கியம் தரும் பனங்கிழங்கை நகர்ப்புற மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

சாகுபடி

பேரையூர் அருகே உள்ளது எஸ்.மேலப்பட்டி. இந்த கிராமத்தில் ஏராளமான பனைமரங்கள் உள்ளது. இங்கு கிடைக்கும் பனங்கொட்டைகள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் கிடைக்கும் பனங்கொட்டைகளை சேகரித்து ஆடி, ஆவணி, மாதங்களில் இப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் மணல்மேடு உள்ள பகுதிகளில் விதைத்து சாகுபடி செய்கின்றனர்.

சாகுபடி செய்த நாளில் இருந்து அதற்கு தேவையான மழை தொடர்ந்து பெய்ததால் மண்ணுக்கு அடியில் உள்ள பனங் கொட்டைகள் நன்றாக விளைந்து தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. நன்றாக விளைந்த பனங்கிழங்கை தோண்டி எடுத்து அவற்றை ரூ.5-க்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் விளைவிக்கப்படும் பனங்கிழங்கை பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்து சென்று மொத்தமாக விற்பனை செய்து வருகிறார்கள்.

பேரையூர் உள்பட பல்வேறு ஊர்களில் சைக்கிளில் சென்று கூவி, கூவி விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றை நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குச்சிகிழங்கு என்று அழைக்கப்படும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பதாலும், குளிர்ச்சி தருபவையாகவும், மலச்சிக்கலை போக்குவதாகவும், விலை குறைவாகவும் உள்ளதால் இவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வருடத்தில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் மட்டுமே இந்த கிழங்கு அறுவடையாகி விற்பனைக்கு வருகின்றது.

மழை

இதுகுறித்து பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டி விவசாயிகள் மகாலிங்கம், பூமிராஜன் ஆகியோர் கூறிய தாவது:- கோடைகாலம் முடிந்தவுடன் பனங் கொட்டைகளை சேகரித்து, அவற்றை மணலும், செம்மண் கலந்த இடங்களில் 500 முதல் 700 சதுர அடி பரப்பளவில் 2 அடி முதல் 3 அடி ஆழம் தோண்டி அதில் பனங் கொட்டைகளை புதைத்து சாகுபடி செய்வோம்.

தற்போது சாகுபடி செய்ததில் இருந்து நல்ல மழை பெய்ததால் தற்போது பனங்கிழங்கு அறுவடைக்கு வந்துள்ளது. இவற்றை தேனி, பெரியகுளம், போடி, விருதுநகர், மற்றும் பல்வேறு ஊர்களுக்கு சென்று மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறோம். கிழங்கின் பருமனுக்கு ஏற்றவாறு விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்