பனங்காட்டாங்குடி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்
பனங்காட்டாங்குடி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்
பனங்காட்டாங்குடி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
பாசன வாய்க்கால்
கூத்தாநல்லூரில் உள்ள 24 வார்டு பகுதிகளிலும் அந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு விவசாய பணிகளை மேற்கொள்வதற்கும், அந்த பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கும் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஏதுவாக பெரும்பாலான இடங்களில் பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தப்பட்டது.
இதன் மூலம் வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை பாசன வாய்க்கால் மூலம் கொண்டு சென்று நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற சாகுபடி பணிகளை அந்த பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.
கழிவுநீர்
குளங்களில் நிரப்பப்படும் தண்ணீரை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்-குளங்கள் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு குப்பைகள், அடர்ந்த காடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி காமராஜர் காலனி தெரு வழியாக செல்லக்கூடிய பாசன வாய்க்கால் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் பாசன வாய்க்கால் மறைந்து கழிவு நீர் காணப்படுகிறது. அதுவும் சாக்கடை தேங்கி நிற்கும் அளவில் காணப்படுகிறது.
வெண்ணாற்றின் கரையோரத்தில் பாசன வாய்க்கால் தலைப்பில் தண்ணீர் செல்வதற்கு முற்பட்டாலும், பாசன வாய்க்கால் தொடர்ச்சியாக இல்லாமல் உள்ளதால், பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது போல் உள்ளது.
தூர்வார வேண்டும்
கடந்த சில ஆண்டுகளாக பாசன வாய்க்கால்-குளங்களுக்கு வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பனங்காட்டாங்குடி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.