ஏரி, குளம், நீர்நிலை பகுதிகளில் பனைமர விதை நடவு செய்ய வேண்டும்
அனைத்து கிராமங்களிலும் ஏரி, குளம், நீர்நிலை பகுதிகளில் பனைமர விதைகள் நட வேண்டும் என அனைத்து கிராம அண்ணாமறுமலர்ச்சி திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
அனைத்து கிராமங்களிலும் ஏரி, குளம், நீர்நிலை பகுதிகளில் பனைமர விதைகள் நட வேண்டும் என அனைத்து கிராம அண்ணாமறுமலர்ச்சி திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
விழிப்புணர்வு கூட்டம்
சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தரங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அனைத்து கிராமங்களுக்கும் அரசின் அடிப்படை வசதிகள் கிடைக்கவும், பொதுமக்களுக்கு நல திட்டங்கள் சென்று சேரவும் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஒவ்வொரு துறையில் உள்ள திட்டங்கள் குறித்தும் அதை பெறும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் முகாம்கள் அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, அரசின் நல திட்டங்கள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒத்துழைப்பு தர வேண்டும்
விடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு நல திட்டங்கள் வழங்க ஊராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும்
அனைத்து கிராமங்களில் ஏரி, குளம் நீர்நிலை பகுதிகளில் பனை மர விதை நடவு செய்ய வேண்டும். நீலத்தடி நீர் மட்டம் உயர நீர் உறுஞ்சும் சிறு கிணறுகளை அமைக்க வேண்டும்.
அனைத்து கிராமங்களில் சுற்றுச்சூழலை பசுமையாக்க மரக்கன்றுகளை நட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் பேசுகையில், ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் பணிகள் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பணிகள் செய்ய வேண்டும். அந்த பணிகள் தரமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். நூறுநாள் பணிகள் குறித்த நேரத்தில் துவங்கவும் முடிக்கவும் வேண்டும் செய்யப்படும் பணிகள் பயன்படும் விதமாக நூறுநாள் பணியாளர்கள் தங்களை பணியில் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்'' என்றார்.
இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு திட்டத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஒன்றியக் குழுத் தலைவர் கலைக்குமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் வெங்குப்பட்டு ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.