பள்ளிபாளையத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பள்ளிபாளையத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பள்ளிபாளையம்:
தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் பள்ளிபாளையத்தில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
பஸ் நிலையம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியானது கடந்த 1965-ம் ஆண்டு ஊராட்சியாக இருந்தது. பின்னர் பேரூராட்சியாக இருந்த பள்ளிபாளையம், தரம் உயர்த்தப்பட்டு தற்போது நகராட்சியாக உள்ளது. இங்கு விசைத்தறி தொழிலை சார்ந்து ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அதற்காக தினந்தோறும் விசைத்தறி தொழிலாளர்கள் பள்ளிபாளையத்தில் இருந்து அதிகளவில் வெளியூர்களுக்கு பஸ்களில் சென்று வருகின்றனர்.
பள்ளிபாளையம் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை, குமாரபாளையம் என பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த பஸ்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இத்தகைய பஸ் போக்குவரத்தை கொண்ட பள்ளிபாளையத்தில் இதுவரை பஸ் நிலையம் அமைக்கப்படாதது அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
போக்குவரத்து நெரிசல்
அதேபோல் பள்ளிபாளையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என பஸ் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலை உள்ளது.
தற்போது அங்கு மேம்பால பணிகள் நடந்து வருவதால் ஏற்கனவே அங்கிருந்த 2 பயணிகள் நிழற்கூடங்களும் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் பஸ் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.
மேலும் தற்போது பள்ளிபாளையத்தில் பஸ் நிறுத்தம் உள்ள 4 சாலை சந்திப்பு பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளிபாளையம் வழியாக செல்லும் பஸ்களின் டிரைவர்கள் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்ல சிரமப்படுகின்றனர்.
அடிப்படை வசதிகள்
எனவே வேறு இடத்தில் பள்ளிபாளையம் பஸ் நிலையம் அமைக்க மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அந்த பஸ் நிலையத்தை அடிப்படை வசதிகளுடன் அமைக்கவும் வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விசைத்தறி தொழிலாளி பாலசுப்ரமணி:- நான் 45 ஆண்டுகளாக பள்ளிபாளையத்தில் வசித்து வருகிறேன். அப்போது பஸ் போக்குவரத்து குறைவாக இருந்தது. தற்போது மக்கள் தொகையும், அதற்கு இணையாக வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். ஆனால் அவர்கள் நிற்பதற்கு ஏதுவாக நிழற்கூடங்கள் கூட இல்லாத நிலை உள்ளது. இங்கு பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் ஏராளமான தொழிலாளர்கள் சிரமமின்றி பஸ் பயணம் மேற்கொள்ள முடியும். எனவே பஸ் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.
பெண்கள் அவதி
வியாபாரி தேவராஜ்:- பள்ளிபாளையத்தில் குறிப்பாக பெண்கள் பஸ் போக்குவரத்தை மேற்கொள்ள சிரமமாக உள்ளது. பஸ் நிலையம் இல்லாததால், சில நேரங்களில் பஸ்களை பிடிக்க பெண்கள் ஓடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. பஸ் நிலையம் இருந்தால், அவர்கள் குறித்த நேரத்தில் வந்து பயணம் மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.