கால்நடைகளின் உயிருக்கு எமனாகும் பாலித்தீன் கழிவுகள்
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உயிருக்கு எமனாகி வரும் பாலித்தீன் கழிவுகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உயிருக்கு எமனாகி வரும் பாலித்தீன் கழிவுகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கால்நடை வளர்ப்பு
விவசாயம் என்பது சவாலானதாக மாறிவிட்ட இன்றைய நிலையில் கால்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு கை கொடுக்கக் கூடியதாக உள்ளது. கறவை மாடுகளை வளர்ப்பதன் மூலம் பால் உற்பத்தி, இறைச்சிக்காக விற்பனை செய்யப்படும் ஆடுகள், கோழிகள் போன்றவற்றின் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர். நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் குப்பைகளில் குவிந்து கிடக்கும் பாலித்தீன் கழிவுகள் கால்நடைகளின் உயிருக்கு எமனாக மாறி வருகிறது.
மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்டதாலும், அடர் தீவனங்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதாலும் கால்நடை வளர்ப்போர் சாலையோர புற்களை மேய்வதற்காக கால்நடைகளை சுதந்திரமாக உலாவ விடுகின்றனர். இவ்வாறு உலா வரும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவது ஒரு புறம் இருக்கிறது. அதேநேரத்தில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் குப்பைகளில் மேய்வதால் பல சிக்கல்கள் உருவாகிறது.
4 பிரிவு வயிறு
காய்கறிக் கழிவுகள், உணவுக் கழிவுகள் போன்றவற்றை பலரும் பாலிதீன் கவருடன் குப்பைகளில் வீசி எறிகின்றனர். உணவுடன் சேர்த்து பாலித்தீன் கழிவுகளும் கால்நடைகளின் வயிற்றுக்குள் போகும் நிலை ஏற்படுகிறது. அவற்றை உண்ணும் கால்நடைகள் அஜீரணக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சில வேளைகளில் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
உதாரணமாக மாடுகளை எடுத்துக்கொண்டால் அவற்றின் வயிற்றில் உள்ள இரைப்பை 4 பிரிவுகளாக உள்ளது. மாடுகள் உண்ணும் உணவு முதல் அறைக்குச் சென்று சேர்கிறது. தேவைப்படும் போது மீண்டும் வாய்க்குள் கொண்டு வந்து மாடுகள் அசைபோட்டு அவற்றை நன்கு மென்று, மீண்டும் வயிற்றுக்குள் அனுப்புகின்றன. அவை படிப்படியாக ஒவ்வொரு அறையாக சென்று சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு, கழிவுகள் பின்புறமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் பாலிதீன் கழிவுகள் மாடுகளின் வயிற்றுக்குள் செல்லும்போது வயிற்றின் முதல் பகுதியில் தேங்கி அடைப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன் இரைப்பை உட்புறச் சுவர்களில் காயத்தையும் ஏற்படுத்தக் கூடும். பாலித்தீன் கழிவுகள் கட்டியாகத் திரண்டு இரைப்பையில் அடைப்பை ஏற்படுத்திக் கொள்வதால் அவற்றை மீண்டும் எடுத்து அசை போட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மாடுகள் அசை போடாமல் இருந்தாலோ, வயிறு உப்பி இருந்தாலோ, காலால் அடிக்கடி வயிற்றை உதைத்தாலோ அவற்றின் வயிற்றில் ஜீரணமாக முடியாத பாலிதீன் கழிவுகளோ அல்லது ஆணி, பீங்கான் போன்ற பொருட்களோ சென்றிருக்கக்கூடும். எனவே உடனடியாக இந்த விலங்கை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வன விலங்குகள்
இது போன்ற சூழலைத் தவிர்க்க பொதுமக்கள் பாலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது அவசியமாகும். மேலும் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும் வகையில் பொது வெளிகளில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு பாதுகாப்பான மேய்ச்சல் சூழலை உருவாக்கித் தர வேண்டியது கடமையாகும்.
வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் பாலிதீன் கவர்களை பயன்படுத்தி விட்டு குப்பைகளில் போடுவதாலும், வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாலிதீன் கவர்களை வீசி எறிவதாலும் யானைகள், மான்கள் காட்டுப் பன்றிகள் போன்ற வனவிலங்குகள் பாலிதீன் கவர்களை உட்கொண்டு பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அனைத்து உயிர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாலிதீன் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.