பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் 'தரை விரிப்பு'
பக்தர்களின் பாதத்தை பாதுகாக்கும் வகையில், பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் ‘தரை விரிப்பு’ விரிக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக திருவிழா, விசேஷம், விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவர். இவ்வாறு வரும் பக்தர்கள் பெரும்பாலும் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். மலைக்கோவிலில் சாமி தரிசனம் முடித்த பக்தர்கள், வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்து வழிபடுகின்றனர். வெளிப்பிரகாரத்தை சுற்றி வரும்போது, வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வெளிப்பிரகாரத்தில் 'கூலிங் பெயிண்டு' அடிக்கப்பட்டு கயிற்றால் ஆன விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தது. கடுமையான வெயில் நிலவும்போது, வெப்பத்தை தணிக்க கயிற்று விரிப்பில் கோவில் ஊழியர்கள் தண்ணீரை தெளிப்பார்கள். இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் வெயில் சூட்டில் இருந்து பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், கயிறு விரிப்புகளை அகற்றி விட்டு பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் பிளாஸ்டிக்கால் ஆன தரை விரிப்புகள் போடப்பட்டு உள்ளன. இதில் பக்தர்கள் ஆனந்தத்துடன் சென்று வருகின்றனர்.