விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு... 14 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு...!
சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.;
மதுரை,
பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது.
இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன், 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தனர். இதில் 1,000 காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பாலமேட்டில் முதல் பரிசை வென்றவர் என்ற பெருமையை பெற்றவர் பொதும்பு பிரபாகரன்.
மேலும் சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடமும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு தமிழக அரசு சார்பில் கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
சிறந்த காளையாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த காளையின் உரிமையாளருக்கும் தமிழக அரசு சார்பில் கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
42 பேர் காயம் :
இன்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 14 மாடுபிடி வீரர்கள், 9 காளை உரிமையாளர்கள், 16 பார்வையாளர்கள், 3 காவலர்கள் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒன்பது பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.