பெயிண்டருக்கு 8 ஆண்டு ஜெயில்

குடும்பத் தகராறில் உறவினரை குத்திக்கொலை செய்த சம்பவத்தில் பெயிண்டருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-07-05 16:02 GMT

நாகர்கோவில்:

குடும்பத் தகராறில் உறவினரை குத்திக்கொலை செய்த சம்பவத்தில் பெயிண்டருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

உறவினர்கள்

ஆரல்வாய்மொழி இந்திரா கூட்டுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் சுரேஷ் பாபு (வயது 37), பெயிண்டர். நாகர்கோவில் ஒழுகினசேரியை அடுத்த மேல தத்தையார் குளத்தைச் சேர்ந்தவர் மோகன் போவாஸ் (55). இவரும் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் உறவினர்கள். இருவரும் சேர்ந்து பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 21-1-2015 அன்று இரவு பெயிண்டிங் வேலைக்கு தேவையான பொருட்களை மோகன் போவாஸ் வீட்டில் இருந்து எடுத்து வருவதற்காக பெஞ்சமின் சுரேஷ் பாபு தனது தம்பி வினோத்துடன் மேலதத்தையார் குளத்துக்கு சென்றார். அப்போது, அங்கு மோகன் போவாஸ் அவரது தாயார் மாணிக்கமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். இதை பெஞ்சமின் சுரேஷ் பாபு தட்டி கேட்டார்.

குத்திக்கொலை

இதனால், ஆத்திரமடைந்த மோகன் போவாஸ் தான் வைத்திருந்த கத்தியால் பெஞ்சமின் சுரேஷ்பாபுவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பெஞ்சமின் சுரேஷ் பாபுவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் போவாசை கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் (விரைவு நீதிமன்றம்) ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்தனர். வழக்கை கூடுதல் செசன்சு நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்து வந்தார். அவர் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

8 ஆண்டு ஜெயில்

குற்றம் சாட்டப்பட்ட மோகன் போவாசுக்கு 304-வது பிரிவின் கீழ் (மரணம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மரணம் விளைவித்தல் குற்றப்பிரிவு) 8 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஆறு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மோகன் போவாஸ் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு குற்றத்துறை வக்கீல் மதியழகன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்