தொடர் திருட்டில் ஈடுபட்ட பெயிண்டர் கைது
சின்னதாராபுரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
தொடர் திருட்டு
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள மலர்ச்சியூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ந்தேதி இவரது வீட்டில் திருட்டு போனது. இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில் 3 பவுன் தங்க சங்கிலி, வெள்ளி கொலுசு உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி சின்னதாராபுரம் அடுத்த அகிலாண்டபுரத்தை சோ்ந்த சின்னத்தம்பி (44) என்பவருடைய வீட்டில் ஒரு பவுன் தோடு, வெள்ளி அரைஞாண் கொடி ஆகியவை திருட்டு போனது.
பெயிண்டர் கைது
எல்மேடு பகுதியை சேர்ந்த கவுதமன் (25) என்பவரது வீட்டில் தோடு மற்றும் ரூ.51 ஆயிரம், லேப்டாப் ஆகியவை திருட்டு போனது. இதேபோல் காட்சிசினாம்பட்டி பிரிவை சேர்ந்த கார்த்திக் (29) என்பவரது வீட்டில் 1 பவுன் தோடு, 1 பவுன் சங்கிலி, ரூ.30 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்த தகவல்களின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு வ.உ.சி. தெருவை சேர்ந்த அலாவுதீன் என்கிற முகமது உஸ்மான் (20) என்பவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பெயிண்டரான இவர், தற்போது சின்னதாராபுரம் பங்களா தெருவில் வசித்து வருகிறார். இதையடுத்து முகமது உஸ்மானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.