ஆங்காங்கே இடிந்து கிடக்கும் பத்மநாபபுரம் கோட்டை சுவர்

ஆங்காங்கே இடிந்து கிடக்கும் பத்மநாபபுரம் கோட்டை சுவர்

Update: 2022-10-03 18:45 GMT

தக்கலை:

பழமைகளை வருங்காலத்துக்கு பாதுகாத்து கொடுப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்தநிலையில் பத்மநாபபுரம் கோட்டை சுவர் ஆங்காங்கே இடிந்து கிடக்கின்றன. அதை புனரமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கற்கோட்டையானது

கடந்தகாலத்தில் பல்வேறு சமஸ்தானங்களாக இருந்த நிலப்பரப்புகளை சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் அரண்மனைகளை கட்டி அதில் மன்னர்கள் வசித்து வந்தார்கள்.

அப்படிப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த கண்கவர் அரண்மனை ஒன்று இன்றளவும் குமரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த அரண்மனை தக்கலையை அடுத்த பத்மநாபபுரத்தில் உள்ளது.

அந்த அரண்மனையின் வெளிபுறத்தில் மன்னர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்ட கோட்டை சுவரானது அதன் பழைய கம்பீரத்தை இழந்து இப்போது காட்சி பொருளாக மாறி நின்று கொண்டிருக்கிறது. கி.பி.1600-ம் ஆண்டு வேணாட்டு மன்னர்கள் ஆட்சியின்போது மண்கோட்டையாக இருந்தது பத்மநாபபுரம் அரண்மனை. பின்னர் வேணாட்டின் பெயர் திருவிதாங்கூர் சமஸ்தானமாக மாற்றப்பட்டது. அதன் பிறகு 1744-ம் ஆண்டு மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியின்போது அரண்மனை கல்கோட்டையாக மாறியது.

இதற்கு காரணம் 1741-ம் ஆண்டு நடந்த குளச்சல் போராகும். டச்சுப் படைகள் குளச்சல் துறைமுகத்தை முற்றுகையிட்டபோது மன்னர் மார்த்தாண்டவர்மா தலைமையில் சென்ற படைகள் டச்சு படையை தோற்கடித்து டச்சு படை தளபதி டிலனாய் உட்பட பல படைவீரர்களை சிறைபிடித்தனர்.

நீளமான கற்களால்...

இதனால் எப்போது வேண்டுமானாலும் எதிரி படைகள் தாக்ககூடும் என்பதை உணர்ந்த மன்னர் மார்த்தாண்டவர்மா சமஸ்தானத்தின் தலைநகரை காப்பாற்றுவதற்காக மண்கோட்டையை வலிமை கொண்ட கல்கோட்டையாக 1741-ம் ஆண்டு கட்ட தொடங்கி 1744-ம் ஆண்டு பணியை முடித்தார்.

யானையும், மனிதர்களையும் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த கோட்டை சுவரின் அடி பகுதியில் நீளமான கருங்கற்கள் குறுக்காக அடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் நீளமான கற்களை இடைவெளி இல்லாமல் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உயரத்திற்கு பிறகு வெட்டுகற்கள் மூலம் ஒரு துப்பாக்கி முனை நுழையும் வண்ணம் ஐந்தடிக்கு ஒரு இடைவெளிவிட்டு உள்புறத்தில் வீரர்கள் இருக்கும் வண்ணம் முக்கோணத்தில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெட்டுகற்கள் சேதம் ஏற்படாமல் இருக்க சுட்ட சுண்ணாம்பு, மணல், பதநீரை கொண்ட கலவையை கொண்டு மேல்பூச்சும் செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பு ஊழியர்கள்

அதிகபட்சமாக 20 அடி உயரத்தில், 18 ஆயிரம் மீட்டர் நீளத்தில், 186 ஏக்கர் நிலப்பரப்பை சுற்றி கட்டப்பட்டுள்ள கோட்டை சுவரின் கம்பீரம் மிகவும் அழகுதான். மூலைகளில் படைவீரர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவதற்காக பிள்ளை கோட்டைகளும் உள்ளது. சுமார் 280 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரு வரலாற்று பொக்கிசம் இது.

மன்னர் ஆட்சிக்கு பிறகு கேரள அரசின் கட்டுபாட்டில் இருந்த குமரி மாவட்டத்தை 1956 -ம் ஆண்டு தமிழக பகுதிகளோடு இணைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பத்மநாபபுரம் அரண்மனையை கேரள அரசு எடுத்துக்கொண்டது. ஆனால் அரண்மனையோடு தொடர்புடைய கோட்டை சுவர் மக்கள் வசிப்பிடபகுதியில் இருகிறது. எனவே, அது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அப்போது கோட்டை சுவரை பராமரிப்பதற்கு தமிழக பொதுப்பணித்துறை மூலம் இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பத்மநாபபுரம் ராமசாமி கோவில்தெருவில் வசித்து வந்த நாராயண பிள்ளை, வடக்குதெருவில் வசித்து வந்த கோபாலபிள்ளை ஆகியோர் தினமும் கோட்டையில் வளரும் செடிகளை பிடுங்குவார்கள். சுவரை யாரும் சேதம் ஏற்படுத்திவிடாத வண்ணம் பராமரித்து வந்துள்ளனர். இவர்களை கோட்டை வாச்சர் என்றே பொதுமக்கள் அழைத்து வந்திருக்கிறார்கள். இவர்களின் வாரிசுகள் இன்னும் பத்மநாபபுரத்தில் வசித்து வருகின்றனர்.

இடிந்து விழுகிறது

இந்த இரண்டு ஊழியர்களின் பணி ஓய்விற்கு பிறகு யாரையும் நியமிக்காததால் கோட்டையின் பராமரிப்பு கேள்விகுறியானது. கோட்டை சுவரின் மீது இருந்து பழங்களை உண்ணும்பறவைகள் போடும் விதைகள் முளைத்து சுவர் கல் இடுக்குகள், மேல் பகுதிகளில் புளி, ஆல், அரசு, கொன்னை, மஞ்சணாத்தி போன்ற மரங்கள் வளர்ந்தது. அதுநாளானதும் பூ பூத்து காய்த்து காடுகளில் மரங்கள் நிற்கும் தோற்றத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு நீண்டகாலம் வளர்ந்து நிற்கும் மரங்களின் வேர்கள் கற்களை பெயர்த்து கீழே தள்ளிவிடுகிறது. இதில் வெட்டுகற்கள் பெரும்பாலான பகுதிகளில் சேதமடைந்துள்ளது. மூலை பகுதிகள் பல இடங்களில் உடைந்து சேதமாகியுள்ளது. இதில் நீளமான கருங்கற்கள் முழுவதும் பெயராத நிலையில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி பெய்த கனமழையில் ஆர்.சி.தெரு பக்கமுள்ள கோட்டை சுவரில் சுமார் 200 அடி தூரம் இடிந்துவிழுந்தது. இரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

சீரமைக்கப்படுமா?

இந்த சம்பவம் பற்றி அறிந்த தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் சம்பவ இட வந்து பார்வையிட்டு கோட்டை சுவரை புரைமைப்பதற்கான முயற்சி மேற்கொண்டார். அதன்பின்னர் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு இடிந்த கோட்டை சுவரை நேரில் வந்து பார்வையிட்டார்.

அமைச்சர்கள் ஆய்வு செய்ததால் உடனே நடவடிக்கை எடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த பகுதி மக்கள் விரைவாக பணி தொடங்கிவிடும் என்று நினைத்தனர். ஆனால் மாதங்கள் ஐந்து ஓடியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் கோட்டை சுவர் இடிந்து விழும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை உடனே தடுத்து நிறுத்த சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி, வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்