செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் படி பூஜை விழா
செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் படி பூஜை விழா நடந்தது.
ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படி பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலையில் படி பூஜை நடைபெற்றது. சித்திரை மாத முதல் நாளில் படி பூஜை நடத்தினால், அந்த ஆண்டும் முழுவதும் வாழ்க்கை படியில் முன்னேறி செல்லலாம் என்பது பக்தர்களின் ஐதீகம். படி பூஜை விழாவை முன்னிட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் கணபதி பூஜை, கோ பூஜை நடைபெற்றது. இதில் படியின் இருபுறங்களிலும் அமர்ந்திருந்த பெண் பக்தர்கள் படியில் தேங்காய், பழம், பூ, பத்தி ஆகியவற்றை வைத்து படி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்கள் மற்றும் திரளான பெண்கள் கையில் செங்கரும்பை ஏந்தி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். படி பூஜையை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.