அய்யலூரில் 2-ம் போக நெல் நடவு பணி தீவிரம்
அய்யலூரில் 2-ம் போக நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் இப்பகுதியில் உள்ள குளம், கிணறுகள் நிரம்பின. இதையொட்டி முதல்போக நெல் சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டன. இருப்பினும் அய்யலூர் பகுதியில் குளம், கிணறுகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது.
இதையடுத்து 2-ம் போக நெல் சாகுபடி பணிக்கு விவசாயிகள் தயாராகினர். நிலத்தில் தண்ணீரை பாய்ச்சி, மாடுகளை கொண்டு ஏர்பூட்டி உழுது தயார் செய்தனர். இந்தநிலையில் தற்போது நெல் நாற்று நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏராளமான பெண்கள் நிலத்தில் வரிசையாக நின்று நெல் நாற்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பெண்கள் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்கவும், களைப்பின்றி வேலை செய்யவும் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் தெம்மாங்கு பாடல்களை பாடிக்கொண்டும், குலவை சத்தமிட்டபடியும் உற்சாகமாக நாற்று நடவு செய்தனர்.