நெல் அறுவடை எந்திரங்களை உழவன் செயலி மூலம் அணுகலாம்

தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரங்களை உழவன் செயலி மூலம் அணுகலாம் என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதா் கூறியுள்ளார்.

Update: 2023-03-30 18:45 GMT

நாகர்கோவில்:

தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரங்களை உழவன் செயலி மூலம் அணுகலாம் என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதா் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உழவன் செயலி

வேளாண்மைப் பொறியியல் துறையின் உழவன் செயலியானது அறுவடை எந்திரங்கள் விவரம் பதிவேற்றம் செய்யவும், வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்கவும், கால விரயத்தை தவிர்க்கவும், பண்ணைப் பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் இன்றியமையாததாக உள்ளது.

அறுவடை காலங்களில் மாவட்டத்தில் உள்ள நெல் அறுவடை எந்திரங்களின் விவரங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள எந்திரங்களின் விவரங்கள், வாடகை விவரங்கள் தெரியாததால் விவசாயிகள் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழக விவசாயிகள் குறித்த காலத்தில் நெல் அறுவடை செய்ய ஏதுவாக தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர் பெயர், முகவரி, செல்போன் விவரங்கள் வட்டாரம் மற்றும் மாவட்டம் வாரியாக உழவன் செயலியில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அறுவடை எந்திரங்கள்

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் சக்கர வகை அறுவடை எந்திரங்கள்-6, தோவாளை வட்டாரத்தில் சக்கர வகை அறுவடை எந்திரங்கள்-3, டிரெக் வகை அறுவடை எந்திரங்கள்-2, ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் சக்கர வகை அறுவடை எந்திரங்கள்-2, தக்கலை வட்டாரத்தில் டிரெக் வகை அறுவடை எந்திரங்கள்-3, குருந்தன்கோடு வட்டாரத்தில் சக்கர வகை அறுவடை எந்திரம்-1, டிரெக் வகை அறுவடை எந்திரம்-1, திருவட்டார் வட்டாரத்தில் டிரெக் வகை அறுவடை எந்திரம்-1 மற்றும் கிள்ளியூர் வட்டாரத்தில் சக்கர வகை அறுவடை எந்திரம்-1 என மொத்தம் குமரி மாவட்டத்தில் சக்கர வகை அறுவடை எந்திரங்கள்-13, டிரெக் வகை அறுவடை எந்திரங்கள்-7 ஆகியவை உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அறுவடை எந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அறுவடை எந்திர உரிமையாளர்களை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு தாங்களே வாடகை தொகை நிர்ணயம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்