புவனகிரி அருகே மழைநீரில் மூழ்கிய நெல் வயல்கள் விவசாயிகள் கவலை

புவனகிரி அருகே மழைநீரில் நெல் வயல்கள் மூழ்கியதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2022-11-09 18:45 GMT


புவனகிரி, 

புவனகிரி அருகே சித்தேரி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு முறையில் சுமார் 300 ஏக்கர் அளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.

இதனால், சித்தேரி கிராமத்தில் உள்ள நெல் வயல்களை மழைநீர் சூழந்து நிற்கிறது. நேரடி நெல் விதைப்பு முடிந்து நெல்மணிகள் தற்போது தான் முளைத்து வரும் சூழலில், தண்ணீர் தேங்கி நிற்பதால், முழுவதும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய இழப்பீடு அளித்திட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

நீரைவடிய வைக்க வழியில்லை

இந்த பாதிப்பு குறித்து, விவசாயிகள் கூறுகையில், அம்பாள்புரம், ஆலம்பாடி வழியாக வரக்கூடிய முரட்டு வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாமல் இருக்கிறது.

இதனால், மழைநீர் அந்த வாய்க்காலில் தடையின்றி செல்ல முடியாமல், வயலுக்குள் புகுந்துவிட்டது. வயலிலும் போதிய வடிகால் வசதிகள் இல்லாத காரணத்தால், தேங்கிய நீரை வடிய வைக்க வழியில்லாமல், விழிபிதுங்கி நிற்கிறோம்.

தற்போது தான் நெல் மணிகள் முளைத்து வந்தன. ஆனால் அதற்குள் முழுவதும் தண்ணீரில் மூழகி விட்டதால், பயிர்கள் அழுகி வீணாகும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம் என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்