அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன;
நாகையில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
பலத்த காற்று
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டது. இதனால் தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் கடந்த 30-ந்தேதி 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலுக்கு செல்ல வேண்டாம்
நாகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். நேற்றுமுன்தினம் நாகையில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. நேற்று அதிகாலை மழை விட்டு விட்டு பெய்தது. அதைத்தொடர்ந்து 9.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழையானது 1 மணி நேரம் வெளுத்து வாங்கியது.
கழிவு நீருடன் மழை நீர்
இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நாகை மருந்துகொத்தள தெரு மெயின் ரோட்டில் கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் நாகை மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் தங்களது பைபர் படகு மற்றும் விசைப்படகுகளை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதேபோல் நாகை மாவட்டத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
நெற்பயிர்கள் சாய்ந்தன
நேற்று அதிகாலை முதல் பெய்த தொடர் கனமழையால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தது. குறிப்பாக நாகை செல்லூர், பலையூர், சிக்கல், கீழையூர், காரப்பிடாகை சுற்று வட்டார பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தது. அறுவடை நேரத்தில் பெய்த மழையால் சாய்ந்த நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவ மழையை கடந்து பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வயல்களில் தெளித்திருந்த உளுந்து, பச்சை பயிர்களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வடிவதற்கு ஒரு வாரம் ஆகும். அதன் பிறகு எந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய முடியும். இந்த மழையானது தொடர்ந்து பெய்தால் பயிர் அழுகிவிடும் அபாயம் ஏற்படும் என்றார்.
நாகூர், வேளாங்கண்ணி
நாகூரில் நேற்று அதிகாலை முதல் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் நாகூர், தெத்தி, முட்டம், மேல நாகூர், பாலகாடு, உத்தமசோழபுரம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இதேபோல் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சம்பா நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்கதிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திட்டச்சேரி
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூர், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம் உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளது.
வேதாரண்யம்
கடல்சீற்றம் காரணமாகவும், மழை பெய்ததாலும் வேதாரண்யம் தாலுகா முழுவதும்
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் வேலை இழந்து உள்ளனர். கோடியக்கரை கடற்கரை பகுதியில் சிவப்பு கொடி ஏற்றி மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம் மற்றும் அகஸ்தியன்பள்ளி, கருப்பம்புலம், நெய்விளக்கு, குரவப்புலம், கரியாபட்டினம், மூலக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நேற்று விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் சம்பா நெற்பயிர்கள் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வயல்களில் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.
வாய்மேடு, கீழ்வேளூர்
வாய்மேடு, பஞ்சநதிக்குளம், தென்னடார், தாணிக்கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்துள்ளது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கீழ்வேளூர், சிக்கல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.