மேய்ச்சல் நிலமாக மாறி வரும் நெல் வயல்கள்

திருவாடானையில் பொய்த்துப்போன பருவமழையால் நெற் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் மேய்ச்சல் நிலமாக வயல்கள் மாறியுள்ளன.

Update: 2023-01-05 18:45 GMT

தொண்டி, 

திருவாடானையில் பொய்த்துப்போன பருவமழையால் நெற் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் மேய்ச்சல் நிலமாக வயல்கள் மாறியுள்ளன.

பொய்த்துப்போன பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று திருவாடானை பகுதி அழைக்கப்படுகிறது. இந்த திருவாடானை தாலுகாவில் ஆண்டுதோறும் அதிக அளவில் விவசாயிகள் நெல் பயிரிடுவது வழக்கம். அதன்படி பருவமழை சீசனின்போது இந்த ஆண்டு சுமார் 26 ஆயிரத்து 600 எக்டேர் நிலப்பரப்பில் விசாயிகள் நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர்.

ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி போதிய அளவு பருவமழை இந்த ஆண்டு பெய்யவில்லை. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. மேலும் பருவ மழை பொய்த்து விட்டதால் நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது கருகி வருகின்றன.

மேய்ச்சல் நிலமாக

இதன் காரணமாக நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். மேலும் அதிக அளவில் கடன் வாங்கி செலவு செய்தும் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். இனி பயிர்களை காப்பாற்ற முடியாது என்ற விரக்தியில் விவசாயிகள் கருகிய நெற்பயிர் வயல்களில் மாடுகளை மேயவிட்டு மேய்ச்சல் நிலமாக மாற்றிவிட்டனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என நம்பி வட்டிக்கு கடன் வாங்கியும் வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்தும் விவசாய பணிகளை மேற்கொண்டோம். ஆனால் பருவ மழை சரிவர பெய்யாததால் நெற்பயிர்கள் அனைத்தும் முழுமையாக கருகிவிட்டது. இதனால் வயல்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு உள்ளோம். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் திருவாடானை தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும் பயிர் பாதிப்புக்கு உரிய பயிர் காப்பீடு தொகையையும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்