சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

சீர்காழி பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.;

Update:2022-11-01 00:15 IST

திருவெண்காடு;

சீர்காழி பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சம்பா சாகுபடி

சீர்காழி வட்டாரத்துக்கு உட்பட்ட பூம்புகார், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், அகனி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி பணிக்காக தற்போது நாற்றுப்பறிப்பு மற்றும் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் சீர்காழி வட்டாரத்தில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.கடந்த சில நாட்களாக மேற்கண்ட பகுதியில் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி சம்பா சாகுபடிக்காக விவசாயிகள் நெல் நாற்றங்காலில் நாற்றுகளை தொழிலாளர்கள் பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாற்று பறிக்கும் பணி

பறிக்கப்பட்ட நாற்றுகளை வயலில் நடவு செய்யும் பணியில் பெண் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பா சாகுபடி பணிகள் குறித்து விவசாயிகள் கூறியதாவது:-சீர்காழி வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களில் மட்டுமே கடந்த மாதத்தில் சம்பா சாகுபடி பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது மீதி உள்ள 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாற்றங்காலில் நாற்று பறிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சலுகைகள்

கடந்த 2 ஆண்டுகளாக சீர்காழி பகுதியில் இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். விவசாயிகள் இழப்பீட்டுக்காக பயிர் இன்சூரன்ஸ் செலுத்தி இருந்தனர். ஆனால் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. மேலும் விதை நெல் விலை உயர்வு, டீசல் விலை, உரம் விலை உயர்வு போன்றவற்றால் விவசாயத்தில் ஈடுபட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை.இதனால் சம்பா சாகுபடி தாமதமாகவே தொடங்கியது. மேலும் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடவு பணிக்கு தொழிலாளர்களை அமர்த்தி கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இதைப்போல சிறு, சிறு சலுகைகளை வழங்கினால் மட்டுமே வரும் காலங்களில் விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்