93 ஆயிரத்து 82 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 93 ஆயிரத்து 82 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறினார்.

Update: 2023-06-30 19:43 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 93 ஆயிரத்து 82 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்றுகாலை நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் இதுவரை 37,233 எக்டேர் பரப்பில் அதாவது 93 ஆயிரத்து 82 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டிலும் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் முதல்-அமைச்சரால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்திற்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் ஏக்கர் இலக்காக பெறப்பட்டுள்ளது. மேலும் குறுவை மற்றும் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 429 டன் நெல் விதைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

உரங்கள் இருப்பு

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா 10,679 டன்னும், டி.ஏ.பி. 4,105 டன்னும், பொட்டாஷ் 2,366 டன்னும் மற்றும் காப்ளக்ஸ் உரம் 3,164 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.தஞ்சை மாவட்டத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதியை பெறாமல் உள்ள 8,871 விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து பயன்பெற்றிட வேண்டும்.

ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே அடுத்த தவணைக்கான தொகையை பெற இயலும். கூட்டுறவுத்துறை மூலம் 2023-24-ம் ஆண்டுக்கு ரூ.456 கோடியே 65 லட்சம் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சை மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 26-ந் தேதி வரை ரூ.29 கோடியே 42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்