தண்ணீர் இல்லாமல் காய்ந்து வரும் நெற்பயிர்
முதுகுளத்தூர் பகுதியில் மழை இல்லாததால் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பகுதியில் மழை இல்லாததால் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.
எதிர்பார்த்த மழை இல்லை
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்துதான் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நெல் விவசாய பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. பருவமழை சீசன் தொடங்கி 1½ மாதம் முடிந்த நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், சிக்கல், தேரிருவேலி உள்ளிட்ட மாவட்டம் முழுவதுமே இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றே கூறப்படுகின்றது.
காய்ந்து வரும் பயிர்கள்
பருவமழையை எதிர்பார்த்து முதுகுளத்தூர், கருமல், தேரிருவேலி, கீழகாஞ்சிரங்குளம், சித்திரங்குடி பூசேரி, பூக்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் விவசாய நிலங்களில் ஏர் உழுது விதை நெல்களை தூவி பயிர்கள் ஓரளவு வளர்ந்து நிற்கின்றது. ஆனால் மழையே இல்லாததால் பயிர்கள் வளர்வதற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தற்போது காய்ந்த நிலையில் பயிர்கள் காட்சியளித்து வருகின்றன.
இதுகுறித்து கீழ காஞ்சிரங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரத்தினவேல் கூறியதாவது:-
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து நெல் விவசாயத்தில் ஈடுபடுவோம். அதுபோல் இந்த ஆண்டும் பருவமழை சீசனை எதிர்பார்த்து சுமார் 30 ஏக்கரில் நெல் விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம். ஆனால் பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பு வரை நல்ல மழை பெய்தது. சீசன் தொடங்கிய பின்பு மழையே பெய்யவில்லை. தற்போது பயிர்கள் நன்றாக வளர்வதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே தான் பயிர்கள் நன்றாக வளரத் தொடங்கும். ஆனால் மழையே இல்லாததால் பயிர்கள் சரியாக வளராமல் காய்ந்த நிலையில் இருந்து வருகின்றது. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். மழை இருந்தால் மட்டுமே தான் இந்த ஆண்டு நெல் விவசாயம் நன்றாக இருக்கும். மழை பெய்யவில்லை என்றால் நெல் விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவார்கள்.
கடந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்ததால் நெல் விவசாயமும் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது.இதனால் 60 கிலோ ஒரு மூடை ரூ.800 இருந்து ரூ.900 வரை விலை போனது.
இவ்வாறு அவர் கூறினார்.