சேலம் மாவட்டத்தில், கொட்டித்தீர்த்த கனமழை: நெல், மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின; விவசாயிகள் கவலை

சேலம் மாவட்டத்தில், கொட்டித்தீர்த்த கனமழையால் நெல், மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;

Update: 2022-10-15 21:05 GMT

சேலம், 

தேவூர் அருகே கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி செங்கானூர் பகுதியில் கனமழையினால் 30 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த மரவள்ளிக்கிழங்கு வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் மரவள்ளிக்கிழங்குகள் அழுகி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.

மேலும் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் வயல்களில் தண்ணீர் சூழ்ந்து சென்றதால் வயல் வரப்புகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெல் பயிர்கள், வெங்காயம், மழைநீரில் மூழ்கி அழுகுகிறது. எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

இதேபோல் தேவூர் அருகே பாலிருச்சம்பாளையம் பகுதியில் மயானத்தில் மழை தண்ணீர் சூழ்ந்து தேங்கி நின்றதால் அப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் சின்னப்பம்பட்டி பகுதியில் செல்லும் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரட்டூர் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது நெல் நடவு செய்திருந்த வயல்களிலும், பருத்தி, சோளப்பயிர்கள் உள்ள வயல்களிலும் வெள்ளநீர் புகுந்து விட்டன. குறிப்பாக தண்ணீரில் வயல்கள் மூழ்கியதால் பயிர்கள் நாசமாகின.

மேலும் சின்னப்பம்பட்டியில் இருந்து கொங்கணாபுரம் செல்லும் மெயின் ரோட்டில் செங்கல்சூளை பகுதியில் இருந்து கரட்டூர், பாச்சாலியூர், செங்காடு, செல்லும் பிரிவு ரோடு ஆகிய இடங்களில் ஓடும் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லமுடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் காட்டூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் பகுதியிலும் வெள்ளநீர் சூழ்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்